ரேசன் கடைகளில் இலவச அரிசி வினியோகம் எப்போது? கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாததால் பொதுமக்கள் அதிருப்தி
ரேசன் கடைகளில் இலவச அரிசி வினியோகம் செய்வது எப்போது? என எதிர்பார்த்த நிலையில் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
புதுச்சேரி,
புதுவையில் ரேசன்கடைகள் மூலம் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியும், சிவப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. தரம் குறித்து புகார்கள் வந்ததால் அரிசிக்குரிய பணத்தை அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.
அதன்படி சிவப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக ரூ.600–ம், மஞ்சள் ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ.300–ம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணத்துக்கு பதிலாக அரிசியே வழங்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடியிடம் ஆட்சியாளர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு சிவப்பு ரேசன்கார்டுக்கு இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தார். அதேநேரத்தில் அரிசியின் தரத்தை பரிசோதித்த பிறகே வினியோகிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட இலவச அரிசி வந்து சேர்ந்தது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டதையொட்டி ரேசன் அரிசி வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் அரசு சார்பில் முறையிடப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படும் நிலையில் ரேசன் அரிசி வினியோகிப்பதில் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ரேசன் அரிசியை வினியோகிக்க மாட்டோம் என ரேசன் கடை ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை கொடுத்து பொதுமக்களுக்கு இலவச அரிசி வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபற்றி குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பதில் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமியிடம் கேட்டபோது, ‘ரேசன் கடை ஊழியர்களுக்கு மாநில அரசால் சம்பளம் வழங்க முடியாவிட்டால் மத்திய அரசு தருவதாக கடந்த 2015–ம் ஆண்டு ஒரு கடிதம் வந்தது. ஆனால் அதை பெற மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேலும் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டத்தை முடித்து சம்பளம் கொடுக்க துறை அமைச்சரோ, அதிகாரிகளோ யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை’ என்றார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது இருப்பதால் பொதுமக்களுக்கு இலவச அரிசி வினியோகம் செய்யப்படுவது இன்னும் தாமதமாகும் என்று தெரிகிறது.