பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் ஒரு தரப்பினர் புகுந்து தாக்கினர். இதில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை சுதேசி மில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னவன், செல்வ.நந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார், காங்கிரஸ் துணைத்தலைவர் நீல.கங்காதரன், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆதவன், செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.