கோதையாறு மின் நிலையத்தில் பரபரப்பு: போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை திடுக்கிடும் தகவல்கள்


கோதையாறு மின் நிலையத்தில் பரபரப்பு: போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 24 April 2019 11:15 PM GMT (Updated: 24 April 2019 7:53 PM GMT)

கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குலசேகரம்,

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் அஜின்ராஜ் (வயது 26). இவர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் பேச்சிப்பாறை அணை பகுதியில் உள்ள கோதையாறு நீர்மின் உற்பத்தி நிலையம் 1-ல் அஜின்ராஜை பாதுகாப்பு பணியில் நியமித்தனர். நேற்று காலை அஜின் ராஜூம், கணேசன் என்ற இன்னொரு போலீஸ்காரரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கணேசன் கோதையாறில் உள்ள மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

அவர் திரும்பி வந்து பார்த்த போது, அங்கு அஜின்ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் பேச்சிப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கோதையாறு மின் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அஜின்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அஜின்ராஜ் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் காதல் விவகாரத்தில் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக தெரிகிறது.

அதன்விவரம் வருமாறு:-

அஜின்ராஜூம், அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் போலீசில் வேலை கிடைத்தது. அதன்பிறகு அஜின்ராஜ், காதலியை சந்திப்பதை தவிர்த்து வந்ததாகவும், திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜின்ராஜ் வீட்டுக்கு அந்த கல்லூரி மாணவி சென்று, தனக்கு அஜின்ராஜை திருமணம் செய்து வைக்கும்படி வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த நித்திரவிளை போலீசார் அந்த மாணவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அஜின்ராஜையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர், ‘தற்போது தான் வேலையில் சேர்ந்துள்ளேன். டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்வதாகவும், ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்கிறேன்‘ என்றும் கூறியதாக தெரிகிறது. அதை ஏற்று போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர். ஆனால் டிசம்பர் மாதம் கூறியபடி நிச்சயதார்த்தம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மாணவி மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் அஜின்ராஜ்- அந்த கல்லூரி மாணவி இருவரும், இனி எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது. நாங்கள் இருவரும் பிரிந்து விடுகிறோம் என்று போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு சென்றனராம். சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது வீட்டுக்கு தெரியாமல் பழகி வந்தனர்.

இந்தநிலையில் அஜின்ராஜின் காதலி கடந்த வாரம் திடீரென்று குழித்துறை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்திய போது, அஜின்ராஜ் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அஜின்ராஜை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி மாணவியை தான் 24-ந் தேதி திருமணம் செய்து கொள்வதாக அஜின்ராஜ் கூறியுள்ளார்.

அதன்படி நேற்று கல்லூரி மாணவியை அஜின்ராஜ் திருமணம் செய்வதாக இருந்தது. கல்லூரி மாணவியும் தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தயார் நிலையில் இருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அஜின்ராஜை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, களியக்காவிளை போலீஸ் நிலையம் சென்று அஜின்ராஜ் கூறியபடி தன்னை திருமணம் செய்துகொள்ள வரவில்லை என்றாராம். அப்போதுதான், அவர் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை போலீசார் கூறியுள்ளனர். உடனே அந்த மாணவி கதறி அழுதபடி தன்னுடைய உறவினர்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

எனவே அஜின்ராஜ் தற்கொலை தொடர்பாக பேச்சிப்பாறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள அஜின்ராஜ் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா? அல்லது காதலி திருமணத்துக்கு கட்டாயப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. மேலும் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் புலன் விசாரணைக்கு பிறகே தற்கொலைக்கான உண்மை காரணம் தெரிய வரும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருந்தாலும் நீர்மின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story