அரசு கல்லூரியில் விண்ணப்ப படிவம் வாங்க மாணவ-மாணவிகள் குவிந்தனர் கலை-அறிவியல் படிப்புகளுக்கு ‘மவுசு’


அரசு கல்லூரியில் விண்ணப்ப படிவம் வாங்க மாணவ-மாணவிகள் குவிந்தனர் கலை-அறிவியல் படிப்புகளுக்கு ‘மவுசு’
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

கலை-அறிவியல் படிப்புகளுக்கு ‘மவுசு‘ அதிகரித்துள்ளதால் விண்ணப்பபடிவம் வாங்க குரும்பலூர் அரசு கல்லூரியில் மாணவ- மாணவிகள் குவிந்தனர்.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ந் தேதி வெளியானதை தொடர்ந்து மாணவ- மாணவிகள் மேற்படிப்பை தொடர கல்லூரிகளை தேடி செல்கிறார்கள். தொழில்நுட்ப படிப்புகளை விட கலை-அறிவியல் படிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக ‘மவுசு‘ அதிகரித்து வருகிறது. அதிகம் செலவு செய்து என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பதைவிட கலை-அறிவியல் படிப்பு படித்து விட்டு போட்டித்தேர்வுகளில் பங்குபெற்று அரசு பணிகளில் சேருவதையே பெரும்பாலான மாணவ-மாணவிகள் விரும்புகிறார்கள். இதனால் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நோக்கி மாணவ- மாணவிகள் படையெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரியில் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங்கியது. இங்கு பி.ஏ. (ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையியல்), பி.எஸ்.சி.(கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வேதியியல், இயற்பியல், உயிர்த்தொழில் நுட்பவியல், நுண்ணுயிரியல்), பி.பி.ஏ. (மேலாண்மையியல்), பி.லிட். (தமிழ்), பி.எஸ்.டபுள்யூ (சமூகப்பணி) ஆகிய 14 பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்த பாட பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை ரூ.50 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். பழங்குடியினர் மற்றும் ஆதிதிரவிடர்கள் சாதி சான்றிதழின் நகலை கொடுத்து இலவசமாக விண்ணப் பங்களை பெற்று கொள்ளலாம். இதனையொட்டி நேற்று காலையில் இருந்தே கல்லூரி வளாகத்தில் விண்ணப்ப படிவங்களை வாங்கி செல்வதற்காக ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து குவிந்தனர். விண்ணப்ப படிவங்களை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ஜானகிராமன் மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், விண்ணப்பம் வினியோகம் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வரை நடைபெறும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பி.எஸ்.சி. பாட பிரிவுகளுக்கு மே 20-ந்தேதியும், பி.ஏ. வரலாறு, பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாட பிரிவுகளுக்கு மே 21-ந் தேதியும், பி.ஏ. (ஆங்கிலம், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையியல்), பி.எஸ்.டபுள்யூ (சமூகப்பணி) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மே 22-ந் தேதியும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். பின்னர் காலியிடம் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மே 24-ந்தேதி கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வின்போது மாணவ-மாணவிகள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்றார்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

Next Story