கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் முறையாக அமல்படுத்துகிறதா? அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய விதிமுறை முறையாக பின்பற்றப்பட மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கான கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசே வழங்கிவிடும். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு கல்வி கட்டணம் சலுகை வழங்குவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தயக்கம் காட்டும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும், மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு ஏழை, எளிய குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை முறையாக கண்காணிக்காத நிலை இருந்து வந்ததாக புகார் கூறப்பட்டது. இதனால் பல பள்ளிகளில் விதிமுறைப்படி 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத போதிலும் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த கல்வி ஆண்டில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை அதிகாரி சுவாமிநாதனிடம் கேட்ட போது, 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனாலும் இந்த இடஒதுக்கீட்டின் படி எத்தனை இடங்கள் உள்ளன என்பது குறித்த தகவல் தரப்படவில்லை. எனவே பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படும் நிலை தொடங்கிவிட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் முறையாக அமல்படுத்துவதை முறையாக கண்காணித்து அனைத்து இடங்களும் ஏழை, எளிய குழந்தைகளால் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.