மதுரை சிறையில் போலீசாருடன் மோதல்: 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு


மதுரை சிறையில் போலீசாருடன் மோதல்: 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 8:50 PM GMT)

மதுரை மத்திய சிறையில் போலீசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என்று சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மதியம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கைதிகள் இருந்த 2 அறைகளில் சோதனை செய்த போது, அங்கு கஞ்சா மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாக தெரியவருகிறது. இதன் காரணமாக போலீசார், சில கைதிகளை தாக்கி விசாரித்ததாக கூறப்படுகிறது. அதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைதிகள் சிலர், மரங்களில் ஏறியும், சிறை கட்டிடத்தின் மேற்கூரையில் நின்றும் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். சிறைக்கு வெளியே சாலைகளை நோக்கி கற்களை வீசினர். ஒரு சில கைதிகள் போலீசார் தங்களை தாக்கக்கூடும் என்ற பயத்தில் தங்களின் உடல்களில் அவர்களே கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கீறி காயங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரை மத்திய சிறை புறக்காவல் நிலைய பொறுப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன், கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தாகவும், கல்வீசி தாக்குதல் நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிறையில் நடந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விசாரணை நடத்தினார்கள். ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகள் சிலரை வேறு சிறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story