மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல், 2 பேர் உடல் நசுங்கி பலி - ராமநத்தம் அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல், 2 பேர் உடல் நசுங்கி பலி - ராமநத்தம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 8:56 PM GMT)

ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே கீழ்ஆதனூரை சேர்ந்தவர் நாராயணன் மகன் பூமாலை (வயது 30), விவசாயி. இவரும் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் ராமசாமி (35), பெருமாள் மகன் குமார் (30) ஆகியோரும் நண்பர்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 பேரும் சொந்த வேலை காரணமாக ஒரே மோட்டார் சைக்கிளில் ஆவட்டிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ஆதனூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினர்.

மேல்ஆதனூர் அருகே வந்த போது, எதிரே திட்டக்குடியில் இருந்து மங்களூர் நோக்கி சென்ற தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பூமாலை, ராமசாமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்து. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் பூமாலை, ராமசாமி ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story