ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை வழக்கில் கடலூர் கோர்ட்டில் தீர்ப்பு, ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை
ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஜவஹர்பாபு(வயது 33), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 21-4-2014 அன்று, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை அவரது வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று அவனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார்.
அதற்கு சிறுவன் ஒத்துழைக்காமல் தப்பிச்செல்ல முயன்றதால், சவுக்குக்கட்டையால் அவனது தலையில் அடித்தார். இதில் அவன் மயங்கி விழுந்த நிலையிலும் அவனது ஆடைகளை களைந்து ஓரின சேர்க்கைக்கு முயற்சித்தார். இந்த நிலையில் மயக்கத்தில் இருந்து திரும்பிய சிறுவன் திடீரென கூச்சல் போட்டான். இதனால் கட்டையால் அவனை அடித்தே கொன்றார். இதன்பிறகு அவர் சிறுவனின் உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார்.
இதற்கிடையே டியூசனுக்கு சென்ற மகன் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை பல இடங்களிலும் தேடினார்கள். அவர்களுடன் ஜவஹர்பாபுவும் சேர்ந்து சிறுவனை தேடுவது போல நாடகமாடினார். பிறகு அவர் சிறுவனின் உடலை பிளாஸ்டிக் சாக்குப்பையில் திணித்து மூட்டை போல் கட்டி, அவர் குடியிருந்த வீட்டின் முன்புறத்தில் அவரது மனைவி ஆரவள்ளி நடத்தி வந்த டிபன்கடைக்குள் பிணத்தை வைத்து ஷட்டரை மூடிவிட்டு தப்பிச்சென்றார்.
மறுநாள் சிறுவனின் செல்போனுக்கு கந்தசாமியின் உறவினர் அகிலா என்பவர் தொடர்பு கொண்டார்.
ஏற்கனவே சிறுவனின் செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து ஜவஹர்பாபு தனது செல்போனில் போட்டு வைத்திருந்ததால் எதிர் முனையில் பேசிய சிறுவனின் உறவினருடன் பேசினார். அப்போது 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே சிறுவனை விடுவிக்க முடியும் என்று மிரட்டல் விடுத்தார்.அதற்கு சிறுவனின் உறவினர்கள் சம்மதித்தனர்.
இதனால் அவர்களிடம், பைசல்மகால் பைபாஸ் சாலைக்கு பணத்துடன் வருமாறு கூறினார். அதன்பேரில் அகிலா 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது கணவர் மற்றும் சிலருடன் பைசல் மகால் புறவழிச்சாலைக்கு சென்றார்.
இந்த நிலையில் ஜவஹர் பாபுவின் டிபன் கடையில் இருந்து துர்நாற்றம் வீசியதால், போலீசார் சந்தேகத்தின் பேரில் டிபன் கடையை திறந்து பார்த்த போது, உள்ளே சாக்குமூட்டையில் சிறுவனின் பிணம் இருப்பதை கண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அகிலாவும் அவரது கணவரும் பணத்தை கொடுக்காமல் திரும்பி வந்தனர்.
இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி அப்போதைய சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் ஜவஹர்பாபுவையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆரவள்ளியையும் கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு அளித்தார்.
அதில் குற்றம்சுமத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜவஹர்பாபுவுக்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள்தண்டனையும், 85 ஆயிரம் ரூபாய் அபராதமும், அவரது மனைவி ஆரவள்ளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story