குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி 41-வது வார்டில் பேகம்பூர் பகுதியில் யூசிப்பியா நகர் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜிக்கா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதையடுத்து அப்பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டன. குழாய்கள் பதிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தங்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைத்தால் தான் கலைந்துசெல்வோம் என பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story