நடந்து முடிந்த கோவை நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ கிடைக்காதது ஏன்? அதிகாரிகள் விளக்கம்
நடந்து முடிந்த கோவை நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கிடைக்காதது ஏன்? என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கோவை,
கடந்த 18-ந் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் பூத் சிலிப் சரியாக வினியோகிக்காதது தான் என்று அனைத்து கட்சியினருமே குற்றம் சாட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு கடந்த 13-ந் தேதி இரவு தான் மாவட்ட நிர்வாகத்துக்கு பூத் சிலிப்புகள் வந்து சேர்ந்துள்ளன. அந்த பூத் சிலிப்புகளை ஓட்டுப்பதிவுக்கு முன்தினம் அதாவது 17-ந் தேதி வினியோகிக்க முடியாது. அதற்கு காரணம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதற்கான பொறுப்புகளை ஏற்பதற்காக முதல் நாளே அந்தந்த தொகுதிகளுக்கு சென்று விட்டனர்.
எனவே 14, 15, 16 ஆகிய 3 நாட்களில் தான் பூத் சிலிப்புகளை வினியோகிக்க முடியும். 3 நாட்களில் 19 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகளை ஒவ்வொரு வீடு வீடாக கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடக்காத காரியம். இதன் காரணமாகத்தான் பூத் சிலிப்புகள் வாக்காளர்களுக்கு கிடைக்கவில்லை என்கின்றனர் அதிகாரிகள். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது;-
பூத் சிலிப்புகள் கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்ததற்கு என்ன காரணம் என்றால் அதை அச்சிடும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் தேர்தல் கமிஷன் அளித்தது தான். இதற்கு முன்பு பூத் சிலிப்புகள் அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவின் மேற்பார்வையில் அச்சிட்டு வினியோகிக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் பூத் சிலிப்புகளை அச்சிடும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் இருந்துள்ளது.
வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் பூத் சிலிப்புகளை அச்சிடும் பணியை கொடுத்தது தான் தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பூத் சிலிப்பின் முக்கியத்துவம் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு தான் தெரியும். வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதன் முக்கியத்துவம் தெரியாததால் கடைசி நேரத்தில் அவை அச்சிட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. அதுவும் முழுமையாக அச்சிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வாக்குச்சாவடிகளுக்கு கொடுக்க வேண்டிய வாக்காளர் பட்டியல் கூட கடைசி நேரத்தில் மாவட்ட தேர்தல் பிரிவு மூலம் அவசரம் அவசரமாக அச்சிட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் பூத் சிலிப்புகளை அச்சிட்டு ஓட்டுப் பதிவுக்கு 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பே வினியோகம் செய்யும் பணி தொடங்கி விடும். இதனால் பூத் சிலிப்புகள் அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு தேடி கொண்டு போய் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் அது கடைபிடிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது-
பூத் சிலிப்புகளை வாங்க வேண்டியதில்லை என்ற அலட்சியத்தை வாக்காளர்களுக்கு உருவாக்கியதும் தேர்தல் கமிஷனின் அறிவிப்பு தான். இதற்கு முன்பு நடந்த தேர்தலின் போது பூத் சிலிப் இருந்தால் போதும். அதையே அடையாளமாக கொண்டு வாக்களிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால் வாக்காளர்கள் தேடிப்பிடித்து பூத் சிலிப்புகளை பெற்றனர். வீடு தேடி வராவிட்டாலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களுக்கு சென்று வாக்காளர்கள் தவறாமல் பூத் சிலிப்புகளை பெற்று அதைக் கொண்டு ஓட்டுப்போட்டனர். ஆனால் இந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு பூத் சிலிப் இருந்தால் மட்டும் போதாது.
பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டைகள் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் தான் ஓட்டுப்போட முடியும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து மக்களை குழப்பியது. இதனால் தேர்தல் கமிஷன் அறிவித்த 11 ஆவணங்களை எடுத்துச் சென்றாலும், வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகள் வெளியே சென்று பூத் சிலிப்புகளை வாங்கி வாருங்கள். அப்போது தான் ஓட்டு போட முடியும் என்று திருப்பி அனுப்பிய சம்பவங்கள் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நடந்தது தான் நிதர்சனமான உண்மை.
இதற்கு காரணம் பூத் சிலிப்புகளில் தான் வாக்காளர் பெயர், வார்டு எண், வரிசை எண் மற்றும் பாகம் எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த தகவல்களை கூறினால் தான் வாக்காளர்கள் ஒரு நிமிடத்தில் ஓட்டுப்போட்டு விட்டு வர முடியும். ஆனால் தேர்தல் கமிஷன் வாக்களிப்பதற்கு பூத் சிலிப் தேவையில்லை என்று அறிவித்ததால் அதை வாங்குவதில் வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த தேர்தலில் தான் பூத் சிலிப்புகள் பெரிய அளவில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வழி உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கியிருந்தன. ஆனால் தேர்தல் கமிஷனின் அறிவிப்பினால் அவை பலன் இல்லாமல் போய் விட்டன. இந்த தேர்தலில் ஓட்டுப்போட்ட 99 சதவீதம் பேர் வாக்குச்சாவடிக்கு வெளியே அரசியல் கட்சியினர் வைத்திருந்த வாக்காளர் பட்டியலை பார்த்து அதில் வாக்காளர் பெயர், வார்டு எண், வரிசை எண், பாகம் எண் ஆகியவை குறிப்பிட்டிருந்த சிலிப்புகளை தான் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story