காமராஜ் சாகர் அணைக்குள், ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்


காமராஜ் சாகர் அணைக்குள், ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 8:56 PM GMT)

ஊட்டி காமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்கின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த கோடைவாச சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் தற்போது கோடைவெயில் வாட்டி வதைப்பதால், குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், கோடை சீசனில் ரம்மியமாக காட்சி அளிக்கும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் வழியில், ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் காமராஜ் சாகர் அணையின் இயற்கை எழில்மிகுந்த தோற்றத்தை கண்டு ரசிக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் அணையையொட்டி குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நுழைவுவாயில் அடைக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் காரில் இருந்து இறங்கி சாலையில் நின்றவாறு அணையை பார்க்கின்றனர்.

ஆனால் ஒரு சில சுற்றுலா பயணிகள் தடுப்புகளை தாண்டி காமராஜ் சாகர் அணைக்குள் அத்துமீறி இறங்கி செல்கின்றனர். அணையில் உள்ள தண்ணீர் அருகே நின்றபடி செல்பி எடுக்கின்றனர். சிலர் பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் அவர்கள் தங்களது குழந்தைகளோடு ஆபத்தை உணராமல் தண்ணீருக்குள் விளையாடுகின்றனர். தண்ணீர் உள்ள பகுதியையொட்டி உள்ள இடம் எப்போதும் ஈரப்பதமாகவே உள்ளது.

சுற்றுலா பயணிகள் நிற்கும் போது, கால் இடறினால் அணைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. சமவெளி பகுதிகளில் உள்ள அணை நீர் போன்று ஊட்டியில் தண்ணீர் கிடையாது. இங்குள்ள தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். இதனால் அணையில் யாரேனும் தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

காமராஜ் சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 49 அடி ஆகும். தற்போது தொடர் மழை பெய்து வருவதால், ஈரப்பத மாக உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகளின் கால் இடறும் நிலை காணப்படுகிறது. எனவே, ஆபத்தை உணராமல் அணைக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுக்க அப்பகுதியில் தகவல் பலகை வைப்பதோடு, அத்துமீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ருத்ராட்சை மரம், யானைக்கால் மரம், காகித மரம் போன்ற அபூர்வமரங்கள் உள்ளன. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை மட்டுமின்றி மேற்கண்ட மரங்களையும் ஆர்வமுடன் கண்டு களிக்கிறார்கள். சுற்றுலா பயணிகளை கவர பூங்காவின் மத்தியில் உள்ள ஏரியில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது. படகில் செல்லும் போது பூங்காவின் அழகிய காட்சி கண்ணை கவரும் விதமாக உள்ளது.

தற்போது மாவட்டத்தில் முதல் சீசன் தொடங்கி உள்ளது. சீசனை குளிர்விக்கும் விதமாக மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூரில் ரம்மியமான காலநிலை நிலவுகிறது.

முதல் சீசனுக்காக பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளில் மலர்கள் மலர்ந்து உள்ளன. இந்த சீதோஷ்ணநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. பூங்காவில் தற்போது புல்தரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் தரையில் அமர்ந்து ஓய்வெடுத்து சென்றனர். எதிர்வரும் மே மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story