நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில், வாக்காளர்களுக்கு கை விரலில் வைக்கப்பட்ட மையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை - கலெக்டர் தகவல்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கை விரலில் வைக்கப்பட்ட மையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்காளர்களில், 10 லட்சத்து 6 ஆயிரத்து 262 பேர் கடந்த 18-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர். இது 73.7 சதவீத வாக்குப்பதிவாகும். நீலகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில், வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. இந்த அழியாத மை பெங்களூருவில் இருந்து தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தேர்தலில் மை வைக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு சிலருக்கு கை விரலில் ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கை விரலில் வைக்கப்பட்ட மையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து எந்த புகாரும் தேர்தல் அதிகாரிகளுக்கு வரவில்லை. புதியதாக 18 வயது நிரம்பிய இளைஞர்கள், இளம்பெண்கள் ஓட்டு போட்டனர். அவர்களுக்கும் மை வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தேர்தல் மை வைத்தவர்கள் ஏதேனும் ரசாயனம் மூலம் கையை கழுவி இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஏதேனும் ஒருவருக்கு தோலில் ஒவ்வாமை இருந்தால், பாதிப்பு ஏற்படக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story