சுல்தான்பத்தேரியில், வனக்காப்பாளரை கடித்த ஆண் புலி கூண்டில் சிக்கியது
சுல்தான்பத்தேரியில் வனக்காப்பாளரை கடித்த ஆண் புலி கூண்டில் சிக்கியது.
கூடலூர்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி, முத்தங்கா பகுதியில் புலி ஒன்று முகாமிட்டு கால்நடைகளை கடித்து கொன்று வந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்தனர். கடந்த 22-ந் தேதி முத்தங்கா சரணாலயத்தை சேர்ந்த வனக்காப்பாளர் கருணாகரன் (வயது 48) என்பவர் வள்ளுவாடி பகுதியில் நடந்து சென்ற போது அப்பகுதியில் புதர் மறைவில் பதுங்கி இருந்த புலி திடீரென கருணாகரன் மீது பாய்ந்து அவரை கடித்தது.
இதனால் கருணாகரன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். பின்னர் புலியை விரட்டியடித்து கருணாகரனை மீட்டனர். தொடர்ந்து பலத்தகாயம் அடைந்த கருணாகரன் சுல்தான்பத்தேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என சுல்தான்பத்தேரி, முத்தங்கா பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூண்டு கொண்டு வரப்பட்டு வள்ளுவாடி பகுதியில் வைக்கப்பட்டது. மேலும் அதன் உள்ளே மாட்டு இறைச்சி துண்டுகள் போடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கூண்டுக்குள் புலி சிக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பத்தேரி வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்தனர். அப்போது சுமார் 10 வயது ஆண் புலி கூண்டுக்குள் இருந்தது. மேலும் புலியால் வேட்டையாட முடியாத அளவுக்கு வயது முதிர்ச்சி ஆகி இருந்தது. இதனால் கால்நடைகளை கடித்து கொன்று வந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சுல்தான்பத்தேரி வனத்துறை அலுவலகத்துக்கு கூண்டோடு புலியை வனத்துறையினர் எடுத்து சென்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story