சேலத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூருக்கு அனுப்பி வைப்பு


சேலத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 25 April 2019 4:00 AM IST (Updated: 25 April 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது நீக்கும் பொது பாதுகாப்பு அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று காலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த அறை திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 330 வாக்குப்பதிவு எந்திரங்கள், 330 கட்டுப்பாட்டு கருவிகள், தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் 314 கருவிகள் (விவிபேட்) ஆகியவை திருவள்ளூரில் உள்ள மாநில மைய கிடங்குக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக் டருமான ரோகிணி சென்றார்.

பின்னர் அவர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

சேலம் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரிவு ஐ.ஜி. அருண் சேலம் வந்தார். பின்னர் அவர் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பில் இருந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார்.

இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிட்டதுடன், வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.

Next Story