பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் படுகாயம்
பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு விழுந்ததில் எலக்ட்ரீசியன் படுகாயம் அடைந்தார்.
பூந்தமல்லி,
நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். இந்த படம் கால்பந்து ஆட்டத்தை மையமாக கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இதற்காக பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் ஏராளமான ஊழியர்கள் இரவு-பகலாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 100 அடி உயரத்தில் கிரேனில் அதிக திறன்கொண்ட மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ்(வயது 52) என்பவர் ஈடுபட்டு வந்தார்.
தலையில் விழுந்து படுகாயம்
அப்போது எதிர்பாராதவிதமாக 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டு இருந்த மின்விளக்கு கழன்று, கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், மயங்கினார்.
இதனால் பதறிப்போன சகஊழியர்கள் செல்வராஜை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் அறிந்ததும் நடிகர் விஜய், தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜிடம் நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோரிக்கை
ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் தினமும் சினிமா படப்பிடிப்பு மற்றும் தனியார் தொலைக் காட்சி சம்பந்தமான படப் பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாமல் இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பலர் காயம் அடைவதுடன், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இங்கு முறையாக தீயணைப்பு வாகனம் மற்றும் முதலுதவி செய்வதற்கான ஆம்புலன்ஸ் வசதிகள் ஏதும் இல்லை. எனவே வருவாய் துறை அதிகாரிகள் இந்த பிலிம் சிட்டியில் ஆய்வு மேற்கொண்டு இனிமேலும் விபத்துகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திரைப்பட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்துக்கு அரங்கு அமைக்கும் பணியின் போது ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story