கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி


கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 25 April 2019 4:45 AM IST (Updated: 25 April 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழியாக அரக்கோணம் சென்று மீண்டும் கடற்கரைக்கு வரும் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்கள் அரக்கோணம், திருமால்பூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை வந்தடையும் வகையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் சுற்றுவட்ட ரெயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு உள்ளது. 213 கி.மீ. தூரம் உள்ளடங்கிய இந்த சுற்றுவட்ட ரெயில் சேவை திட்டம் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடக்கத்தில் அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே அகலப்பாதையில் மின் வழித்தடம் அமைக்கும் பணியின்போது பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகம் கடும் ஆட்சேபணை தெரிவித்தது. இதனால் அரக்கோணம்-தக்கோலம் இடையேயான 9.5 கி.மீ. தூரத்துக்கு அகலப்பாதை அமைக்க முடியாததால் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை முடங்கியது.

புதிய திட்டம் அமல்

இதனால் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் சென்டிரல் வந்து, அங்கேயுள்ள மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் வழியாக அரக்கோணம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சுற்றுவட்ட ரெயில் சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனாலும் கடற்படை விமானதள நிர்வாகம் சமரசம் அடையவில்லை.

இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் விமான தளத்துக்கு எந்தவித பாதிப்பு இல்லாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் முடிவு இறுதியானது. அதன்பின்னர் நடந்த ஆய்வுகளை தொடர்ந்து இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

அரக்கோணம்-தக்கோலம் இடையே...

இதன்மூலம் தக்கோலம் ரெயில் நிலையம் புதிய அடையாளம் பெற்றுள்ளது. இதனால் இனி செங்கல்பட்டில் இருந்து நேரடியாகவே அரக்கோணத்துக்கு ரெயிலில் பயணிகள் செல்லலாம். குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து தக்கோலத்துக்கு ரூ.10 கட்டணத்தில் ரெயிலில் செல்லமுடியும்.

இதுதவிர காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பட்டாபிராம் போன்ற பகுதிகளுக்கும், திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம், தாம்பரம் போன்ற பகுதிகளுக்கும் பயணிகள் எளிதில் செல்ல முடியும். இதன்மூலம் இனி செங்கல்பட்டு, பூங்கா, தாம்பரம் போன்ற ரெயில் நிலையங்களுக்கு வந்துசெல்ல வேண்டிய நிலை பயணிகளுக்கு இல்லை. இதற்காக அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் பயணிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பயணிகள் வரவேற்பு

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

சுற்றுவட்ட ரெயில் சேவை திட்டத்தால் பயணிகளுக்கு தேவையில்லா அலைச்சல் நீங்குவதுடன், 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரையிலான நேரமும் மிச்சமாகிறது.

குறிப்பாக திருவள்ளூர்-செங்கல்பட்டு இடையே இந்த ரக ரெயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டால் வசதியாக இருக்கும். புறநகர் பகுதிகளை எளிதாக இணைக்கும் இந்த திட்டம் தாமதமாக வந்தாலும் நல்ல பலனை கொடுத்திருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வழக்கமான கட்டணமே பொருந்தும்

அதே வேளையில் இந்த திட்டத்தில் பயணிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணி திருவள்ளூர் வழியாக செல்லும் ரெயிலில் தான் பயணிக்க முடியும். ஒருவேளை அந்த பயணி தாம்பரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் ரெயிலில் பயணித்தால் அது விதிமீறல் குற்றமாகவே கருதப்படும். அந்த பயணிக்கு அபராதமும் விதிக்கப்படும். ஏனென்றால் செல்ல வேண்டிய இடத்துக்கான எளிய மற்றும் விரைவு பயண திட்டம் அதற்கான சாப்ட்வேரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேவேளை விருப்பத்தின் பேரில் வேறு வழித்தடங்களிலும் பயணிகள் ரெயிலில் செல்லலாம். அந்த விவரம் டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும். மற்றபடி வழக்கமான கட்டணமே இதற்கும் பொருந்தும்” என்றார்.

சுற்றுவட்ட ரெயில் சேவை திட்டத்தில் சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர், அரக்கோணம் வழியாக செல்லும் ரெயில் காலை 9.50 மணிக்கும், அரக்கோணம், திருமால்பூர் வழியாக கடற்கரை செல்லும் ரெயில் காலை 10.30 மணிக்கும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story