கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு தடையின்றி மின்சாரம் - கலெக்டர் பேட்டி


கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு தடையின்றி மின்சாரம் - கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

கடலூர்,

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந் தது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தினந்தோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அன்புசெல்வன் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பூட்டி வைக்கப்பட்டுள்ள சீல் சரியாக உள்ளதா? என்பதை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 அறைகளில் இந்த எந்திரங்கள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க 2 தாசில்தார்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர வேட்பாளர்கள், முகவர்களும் அங்கு தங்கி 24 மணிநேரமும் கண்காணித்து கொள்ளலாம்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்பட்டால், அதை சரி செய்யவும், மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 அறைகளுக்கும் கூடுதலாக தலா ஒரு ஜெனரேட்டரும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. தீயை தடுக்கவும் தீ தடுப்பு கருவி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை இயக்க தீயணைப்பு வீரரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

பேட்டியின் போது கடலூர் சப்-கலெக்டர் சரயூ, தாசில்தார் ஜான்சிராணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story