திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் திடீர் சாவு வயிற்று வலிக்கு ஊசிபோட்ட டாக்டர் கைது
தானேயில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயிற்றுவலிக்கு ஊசிபோட்ட டாக்டரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை,
தானே மும்ரா அருகே சீல்காவ் பகுதியை சேர்ந்தவர் ராமன் பாட்டீல்(வயது25). இவருக்கு நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி திருமணம் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவர் சீல்பாட்டாவில் உள்ள டாக்டர் தாவூத்கான் என்பவரின் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு அவருக்கு டாக்டர் தாவூத் கான் 2 ஊசிகள் போட்டார். சிறிது நேரத்தில் ராமன் பாட்டீல் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பலியான ராமன் பாட்டீலின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் தாவூத்கான் தவறான ஊசிபோட்டதால் தான் ராமன் பாட்டீல் இறந்ததாக குற்றம் சாட்டினர்.
தகவல் அறிந்து வந்த டைகர் போலீசார் ராமன் பாட்டீலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போராட்டத்தில் குதித்த அவரது குடும்பத்தினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை கலைந்துபோகச்செய்தனர்
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டாக்டர் தாவூத் கானை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story