சிர்சி டவுனில் சம்பவம் உட்கட்சி பூசலால் பா.ஜனதாவினர் இடையே கோஷ்டி மோதல் - வாலிபர் கொலை
சிர்சி டவுனில், பா.ஜனதாவினர் இடையே உட்கட்சி பூசலால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மங்களூரு,
உத்தரகன்னடா உள்பட வடகர்நாடகத்திற்கு உட்பட்ட 14 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தல் நாளன்று இரவு உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி டவுனில் உள்ள கஸ்தூர்பா நகரில், பா.ஜனதா சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த இருபிரிவினர் இடையே உட்கட்சி பூசலால் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
மேலும் கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அப்பகுதியினர் சிர்சி மாருகட்டே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர். இதனால் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் போலீசார் கோஷ்டி மோதலில் காயமடைந்திருந்த பா.ஜனதா சிறுபான்மையின மாவட்ட துணைத்தலைவர் அனீப் தாசில்தார், பாபாஜான்(வயது 22) ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிர்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாபாஜான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
அனீப் மேல்சிகிச்சைக்காக தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிர்சி மாருகட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story