20 போ் அல்ல 78 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர் - மந்திரி டி.கே.சிவக்குமார் கிண்டல்


20 போ் அல்ல 78 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர் - மந்திரி டி.கே.சிவக்குமார் கிண்டல்
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 10:18 PM GMT)

பா.ஜனதா தலைவர்களுடன் 20 பேர் அல்ல, 78 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளதாக மந்திரி டி.கே.சிவக்குமார் கிண்டலாக கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதால், நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 5 ஆண்டுகளையும் கூட்டணி ஆட்சி நிறைவு செய்யும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தங்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள். 20 பேர் அல்ல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78 பேரும் பா.ஜனதாவினருடன் தொடர்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதா தலைவர்களுடன் தான் இருக்கிறார்கள். சட்டசபையில் பா.ஜனதாவினருடன் தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.

ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சி எல்லா பதவிகளையும் கொடுத்துள்ளது. அப்படி இருந்தும் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்தது ஏன்? என்பது தெரியவில்லை. ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானப்படுத்தும் முயற்சியில் பெலகாவி காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரமேஷ் ஜார்கிகோளி எனக்கு நல்ல நண்பர். அவர் மீது மிகுந்த கவுரவம் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அவர் இருந்து வருகிறார். அதனால் ராஜினாமா முடிவை ரமேஷ் ஜார்கிகோளி கைவிட வேண்டும். ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு சென்றால், அவரது ஆசைகளை கடவுள் நிறைவேற்ற வேண்டும்.

ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை தாக்கிய வழக்கில் கணேஷ் எம்.எல்.ஏ.வுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2 பேரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். அவர்கள் 2 பேரும் ஒன்று சேர வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவர்களின் விருப்பமாகும்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story