சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை


சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி, நகரசபை அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிக்கு கோட்டமலை, மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோடைகாலம் என்பதால் கோட்டமலை பகுதியில் இருந்து குடிநீர் வரத்து இல்லை என கூறப்படுகிறது. தற்போது சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனை கண்டித்து தி.மு.க நகர செயலாளர் சங்கரன், ம.தி.மு.க நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, தி.மு.க மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, காங்கிரஸ் நகர தலைவர் உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் குருசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அசோக்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக நகராட்சி மேலாளர் லட்சுமணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், குடிநீர் பிரச்சினையை ஒரு வார காலத்திற்குள் சரிசெய்யாவிட்டால் நகராட்சி பகுதிகளில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நகரசபை ஆணையர் (பொறுப்பு) முகைதீன் அப்துல்காதர் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சினை தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story