திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 தீர்த்த குளங்களை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 தீர்த்த குளங்களை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரம் அருகில் சிவகங்கை தீர்த்தம், கிளி கோபுரம் அருகே பிரம்ம தீர்த்தம் என 2 புண்ணிய தீர்த்த குளங்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த தீர்த்த குளங்களில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நாளடைவில் பாதுகாப்பு கருதி இந்த 2 குளங்களும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டு பக்தர்கள் பயன்படுத்த முடியாத வகையில் தற்போது காட்சி பொருளாகவே உள்ளது.
இந்த 2 புண்ணிய தீர்த்த குளங்களிலும் கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகைகளை கொண்ட ஏராளமான மீன்கள் உள்ளன.
சிவகங்கை தீர்த்தம் மற்றும் பிரம்ம தீர்த்த குளங்களில் கடந்த 23-ந் தேதி ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும், செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் கோவில் நிர்வாகம் சார்பில் 2 தீர்த்த குளங்களில் செத்து மிதந்த மீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் 2 தீர்த்த குளங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, தாசில்தார் மனோகரன் மற்றும் மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலர்கள், கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள 2 குளங்களையும் பார்வையிடப்பட்டு உள்ளது. இந்த குளங்களில் உள்ள மீன்கள் இறந்து கிடந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக மீன்கள் இறந்து இருக்கலாம்.
இருப்பினும் இந்த 2 குளங்களில் உள்ள தண்ணீர் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் உள்பட அதிகாரிகள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்கத்தேர் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. கடந்த 21-ந் தேதி காலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கத்தேரை இழுத்தனர். திடீரென தேரின் விமானம் உள்ள மேல்பீடம் சரிந்து விழுந்தது. அப்போது ஒருவர் மீது மேல் பீடம் விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த தங்கத்தேர் அறநிலையத்துறை அதிகாரி மூலம் ஆய்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது.
கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த கலெக்டரிடம் நிருபர்கள் தங்கத் தேரை பார்வையிட வேண்டும் என்றனர். கலெக்டர் கோவில் அலுவலர்களிடம் தங்கத் தேர் இருந்த இடம் பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதனை திறக்க கூறினார். உடனே கோவில் அலுவலர்கள், கோவில் இணை ஆணையர் சாவியை எடுத்து சென்று விட்டார் என்றனர். இதனால் கலெக்டர் தங்கத்தேரை பார்வையிடாமல் சென்றார்.
Related Tags :
Next Story