ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 5:04 PM GMT)

ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆரணி,

ஆரணியை அடுத்த மாமண்டூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. வறட்சி காரணமாக 2 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சுமார் 7.30 மணி அளவில் ஆரணி - செய்யாறு சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் பிரச்சினை காரணமாக நாங்கள் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சமையல் செய்து தரமுடியவில்லை. வேலைக்கும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கும்வரை மறியலை கைவிட மாட்டோம் என்றனர்.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. அப்போது செய்யாறு சாலையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் எங்களுக்கு தேர்வு நடக்கிறது. எங்களின் பஸ்சை மட்டும் விட வேண்டும் என்றனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வழிவிட மறுத்து விட்டனர். இதனால் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் காலை 9.30 மணிக்கு கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story