ஓடும் ரெயிலில் மயக்க பொடி தூவி ரெயில்வே அதிகாரி மனைவியிடம் ரூ.5½ லட்சம் நகை கொள்ளை - விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை
ஓடும் ரெயிலில் மயக்க பொடி தூவி ரெயில்வே அதிகாரி மனைவியிடம் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பணகுடி கிராமத்தை சேர்ந்தவர் அகமதுஅலிகான் (வயது 52). இவர் சென்னை பெரம்பூரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து ரெயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய உறவினர் ஒருவரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா பணகுடியில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக அகமதுஅலிகான் தனது மனைவி சையத்அலி பாத்திமா (45), மகன் ஷபானி (23), மகள் சச்சினா (20) ஆகியோருடன் சென்றார்.
விழா முடிந்ததும் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை பணகுடியில் இருந்து வள்ளியூர் ரெயில் நிலையத்திற்கு பஸ்சில் வந்தனர். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி- சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தனர்.
நேற்று அதிகாலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் சையத்அலி பாத்திமா கண்விழித்து எழுந்து பார்த்தார்.
அப்போது தான் வைத்திருந்த கைப்பையை காணாதது கண்டு திடுக்கிட்டார். உடனே அவரது குடும்பத்தினர், அந்த பெட்டி முழுவதும் தேடி பார்த்தனர். அப்போது அதே பெட்டியில் உள்ள கழிவறையில் கைப்பை கிடந்தது.
உடனே அந்த கைப்பையை எடுத்து பார்த்தபோது அதில் செல்போன் மட்டும் இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.5½ லட்சம் மதிப்புள்ள 23 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரில், வள்ளியூரில் இருந்து நாங்கள் 4 பேரும் சென்னைக்கு பயணம் செய்தோம். ரெயில் பயணத்தின்போது தூங்கும் சமயத்தில் நகைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதி நாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி எனது மனைவி வைத்திருந்த கைப்பையில் வைத்திருந்தோம்.
மதுரையை ரெயில் கடந்ததும் நாங்கள் 4 பேரும் தூங்கி விட்டோம். அதன் பிறகு விழுப்புரம் அருகே ரெயில் வரும்போது கண்விழித்து பார்த்தபோது கைப்பையில் இருந்த நகை, பணத்தை காணவில்லை. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது, யார் நகை, பணத்தை கொள்ளையடித்தனர் என்றே தெரியவில்லை. நாங்கள் தூங்கி எழுந்தபோது சற்று மயக்கமான நிலையில் இருந்தோம்.
எனவே யாரேனும் கொள்ளையர்கள், நாங்கள் பயணம் செய்த பெட்டியில் மயக்க பொடியை தூவிவிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விசாரித்து, கொள்ளையர்களை கண்டுபிடித்து நகையை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின்சுஜாதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓடும் ரெயிலில் ரெயில்வே அதிகாரி மனைவியிடம் நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story