ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 7:18 PM GMT)

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப் படுகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தடைந்தார். காலை 4.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

பின்னர் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

விழாவின் 2-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், நாளை (சனிக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருகிற 29-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், வருகிற 30-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.

வருகிற 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். வருகிற 2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story