சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் கருகி சாவு- காப்பாற்ற முயன்ற கணவரும் பலி காவேரிப்பாக்கம் அருகே பரிதாபம்


சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் கருகி சாவு- காப்பாற்ற முயன்ற கணவரும் பலி காவேரிப்பாக்கம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-26T00:57:25+05:30)

காவேரிப்பாக்கம் அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீவிபத்தில் கணவன்-மனைவி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பனப்பாக்கம், 

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த மாதாணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38), தொழிலாளி. இவருடைய மனைவி அருள்மொழி (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருள்மொழி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அருள்மொழியின் சேலையில் தீப்பிடித்தது. இதனை கண்ட முருகன் உடனடியாக தீயை அணைக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக முருகன் அணிந்திருந்த உடைகளிலும் தீப்பற்றி எரிந்தது. கணவன்-மனைவி இருவரும் மாறி, மாறி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. அதையடுத்து இருவரும் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தீயில் கருகிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவிக்கு பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீவிபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

Next Story