தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் இன்றும், நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு கூட்டுக்குழு அறிவிப்பு


தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் இன்றும், நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு கூட்டுக்குழு அறிவிப்பு
x
தினத்தந்தி 26 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் இன்றும், நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்து உள்ளது.

நாமக்கல்,

தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு துணை தலைவர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது மக்கள் உரிய காலத்திற்குள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவு செய்து பெற முடியாத சூழ்நிலையில், நீதிமன்றத்தை நாடி உரிய விளக்கங்கள் கொடுத்து நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டு, நீதிமன்ற உத்தரவின் மூலம் முறையாக பதிவு செய்து, பெறுவதற்கு வழிமுறை செய்யப்பட்டு இருந்தது.

தற்போது இதை மாற்றி உதவி கலெக்டர் மூலம் மனு செய்து பெற்றுக்கொள்ள நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதால், கோப்புகள் அனைத்தும் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதை தமிழக ஐகோர்ட்டு மூலம் மீண்டும் பழைய நிலைக்கே மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் முறையாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல்கள் தாக்கல் செய்யும் வக்காலத்து மற்றும் மெமோ குறிப்பில் வக்கீல் சான்றோப்பம் இடத்தில் புகைப்படம் ஒட்டும் நடைமுறையினை கைவிட வலியுறுத்தியும், நீதிமன்ற கட்டணத்தை மாற்றி அமைப்பது, தேனி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையின் போது வக்கீல்களை அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story