நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்


நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 April 2019 3:45 AM IST (Updated: 26 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல்லை,

நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனை கவனத்தில் கொண்டு நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் அருகில் ரூ.18 கோடியில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. இதற்கான மண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. இந்த பாலம் நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் தொடங்கி, முத்துராமலிங்க தேவர் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள பாலம் போல் அகலமாக அமைக்கப்படுகிறது. 237 மீட்டர் நீளமும், 14.8 மீட்டர் அகலமும் கொண்ட வகையில் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. பாலத்தில் இரு பகுதியிலும் இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்த இணைப்பு சாலை காங்கிரஸ் அலுவலகம் முன்பு வரை அமைக்கப்பட இருக்கிறது.

இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 10 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இரவும், பகலும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “புதிய பாலம் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. பணிகள் முடிந்தவுடன், பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பாலம் அமைக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்” என்றார்.

Next Story