திருக்கோவிலூர் அருகே, கொத்தனார், விஷம் குடித்து தற்கொலை - மதுகுடித்து விட்டு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீதமுடிவு
திருக்கோவிலூர் அருகே மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ராஜாம்பாளையம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராமச்சந்திரன்(வயது 21). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது பெற்றோர், ராமச்சந்திரனை குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன் மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதைபார்த்த பெற்றோர், ராமச்சந்திரனிடம் ஏன்? தினந்தோறும் மதுகுடிக்கிறாய்? என கேட்டு அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தாய் பொன்னியம்மாள் திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story