மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றம் + "||" + Brain cancer from the Government Medical College hospital was surgically removed

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றம்
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை புற்றுநோய் கட்டி அகற்றி மருத்துவ குழுவினர் சாதனை படைத்து உள்ளனர்.
புதுக்கோட்டை,

ஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 55). இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து மூளையில் உள்ள புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டு கடந்த 13-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை தலைமை மயக்க மருத்துவர் ரவிக்குமார், மருத்துவர் சரவணன் ஆகியோர் நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தினர். மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஸ்டாலின் ராஜ்குமார் மற்றும் உதவி மருத்துவர் பாரதிராஜா, செவிலியர் ஜெயமேரி பெல்சிதா ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

விரைவில் மின்சார ரம்பம் வாங்கப்படும்

அறுவை சிகிச்சையின்போது இடது பக்க மூளையின் முன்பகுதி மற்றும் நடுபகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி வலது பக்க மூளையை அழுத்தி கொண்டிருப்பது தெரியவந்தது. மிகவும் கவனமான முறையில் அக்கட்டி அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கட்டி திசு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பொன்னம்மாள் முழு ஆரோக்கியத்துடன் நேற்று மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பொன்னம்மாளை மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் நேரில் பார்த்து, சிகிக்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் பொன்னம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை பாராட்டினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மூளை புற்று நோயானது இளையவர், வயதானவர் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த நோயாளிக்கு வலது பக்க மூளையையும், கண் பார்வை நரம்புகளையும் கட்டி அழுத்தி கொண்டிருந்தது. இதனால் அவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் ஏற்பட்டது. இதை சரிசெய்யாத பட்சத்தில் இதயம் மற்றும் சுவாசத்தை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி அழுத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முதுகு தண்டுவடம் மற்றும் மூளை அறுவை சிகிச்சையினையும் செய்வதற்கான கட்டமைப்பு உள்ளது. விரைவில் மண்டை ஓட்டினை எளிதில் பிளப்பதற்காக மின்சார ரம்பம் வாங்கப்படும் என்றார்.