புன்னம் சத்திரம் அருகே பெண் போலீசிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


புன்னம் சத்திரம் அருகே பெண் போலீசிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 8:33 PM GMT)

புன்னம் சத்திரம் அருகே பெண் போலீசிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள பழமாபுரம் காலனியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 26). இவர் கரூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிக்கு செல்வதற்காக தனது மொபட்டில் ஆலாம்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

புன்னம் சத்திரம் வழியாக வந்தபோது, எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் 2 மர்ம நபர்கள் வந்து லாவண்யாவின் மொபட்டை மறித்து நின்றனர். பின்னர் லாவண்யா கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிசங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாவண்யா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ஆனால் அதற்குள் அந்த 2 மர்மநபர்களும், தாலி சங்கிலியுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து லாவண்யா வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாலி சங்கிலியை பறித்து சென்ற 2 மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பெண் போலீசிடமே தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story