தொட்டியம் அருகே பஸ்-கார் மோதல்: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் உள்பட 2 பேர் பலி 6 பேர் படுகாயம்


தொட்டியம் அருகே பஸ்-கார் மோதல்: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் உள்பட 2 பேர் பலி 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 April 2019 4:30 AM IST (Updated: 26 April 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்டதில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் தவிட்டுபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் கஜேந்திரன்(வயது 32). இவர் காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பாலகிருஷ்ணன்(28), டிரைவர்.

இவர்கள் நேற்று மாலை ஒரு காரில் மோகனூர் சென்று விட்டு காட்டுப்புத்தூர்-மோகனூர் சாலையில் தவிட்டுபாளையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். உன்னியூர் பழைய மணல் குவாரி அருகே வந்தபோது காட்டுப்புத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்டன. இதையடுத்து தனியார் பஸ் அருகில் இருந்த தென்னை மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கி உருக்குலைந்தது.

காரில் இருந்த பாலகிருஷ்ணன், கஜேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த உன்னியூரை சேர்ந்த வேன் டிரைவர் சண்முகம்(55), தவிட்டுபாளையத்தை சேர்ந்த மோகனா(55), ஸ்ரீராமசமுத்திரம் தங்கபொண்ணு(54) உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மோகனூர் மற்றும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story