சேலம் புதிய பஸ் நிலையத்தில் 58 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு 17 பேருக்கு நோட்டீஸ்


சேலம் புதிய பஸ் நிலையத்தில் 58 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு 17 பேருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 8:45 PM GMT)

சேலம் புதிய பஸ்நிலையத்தில் உள்ள 58 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.

சேலம், 

சேலம் புதிய பஸ்நிலையத்தில் டீக்கடை, பழக்கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளி பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 14 பேர், 7 குழுக்களாக சென்று திடீரென ஆய்வு செய்தனர். ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:- புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல்கள், பழக்கடைகள், குளிர்பான கடைகள், தள்ளுவண்டி கடைகள், தின்பண்ட கடைகள் என 58 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது காலாவதியான பிஸ்கட்டுகள், சிப்ஸ் போன்ற குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருட்கள் 16 கிலோ, காலாவதியான பாக்கெட் மோர், சர்பத், ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் 11 லிட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா 180 கிராம் கைப்பற்றப்பட்டது. மேலும் காலாவதியான பொருட்கள் விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தியதற்காக மொத்தம் 17 கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடைகளில் மீண்டும் இத்தகைய சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் தொடரப்படும். இது தொடர்பாக அனைத்து விற்பனையாளர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story