புயல் சின்னம் எதிரொலி குமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை


புயல் சின்னம் எதிரொலி குமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 9:03 PM GMT)

குமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை பத்திரமாக மீட்க மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருங்கல்,

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்ட கடல் பகுதியில் கடும் சீற்றம் ஏற்பட்டது. குளச்சல் கடற்கரை பகுதியில் ராட்சத அலைகள் எழுந்ததால் மீனவர்களின் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதேபோல் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை, நீரோடி காலனி பகுதியில் கடல் நீர் கரையோர பகுதியில் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், மீனவர்கள் தங்களின் படகுகளை மேடான பகுதிகளில் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

2-வது நாளாக...

நேற்று 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சூறைக்காற்றுடன் 10 முதல் 15 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து வந்தது. இதனால் குளச்சல் குறும்பனை பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் அவர்கள் வள்ளம் மற்றும் கட்டுமரங்களை மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.

குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. பிள்ளைத்தோப்பு பகுதியில் கடல் நீர் கரையோரத்தில் உள்ள மீனவர்கள் வீடுகளை சூழ்ந்தது.

இதேபோல், வள்ளவிளை, நீரோடி காலனி, மார்த்தாண்டம்துறை, பூத்துறை, அழிக்கால், மண்டைக்காடு புதூர் உள்ளிட்ட மேற்கு கடற்கரை பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

அரசுக்கு கோரிக்கை

இந்த சீற்றத்துக்கு இடையே சில விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினார்கள். அப்போது, அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு புயல் பற்றிய தகவல் தெரியாது. எனவே, அரசு ஆழ்கடல் பகுதியில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story