திருப்போரூரில் பட்டப்பகலில் பயங்கரம் கடைக்குள் புகுந்து பெண் வியாபாரி வெட்டிக்கொலை
திருப்போரூர் முருகன் கோவில் அருகே கடைக்குள் புகுந்து பெண் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் திருவாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவரது மனைவி சத்யா (45). இவர்களுக்கு 20 வயதில் மகள் உள்ளார். சத்யா மற்றும் அவரது கணவரும் திருப்போரூர் முருகன் கோவில் அருகே சன்னதி தெருவில் பேன்சி கடை நடத்தி வந்தனர்.
நேற்று காலை சுப்பிரமணி, சத்யா இருவரும் கடையை திறந்து வியாபாரம் செய்தனர். காலை 10 மணியளவில் சுப்பிரமணி சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடையில் சத்யா மட்டும் இருந்தார்.
காலை 10½ மணியளவில் வாடிக்கையாளர் பெண் ஒருவர் கடைக்கு சென்றுள்ளார். நீண்டநேரம் கூச்சலிட்டும் வெளியில் யாரும் வராததால் உள்ளே எட்டி பார்த்துள்ளார். அப்போது சத்யா தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயத்துடன் துடி துடித்தபடி கிடந்தார். அந்த பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் கூடினர்.
பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து சத்யாவை சிகிச்சைக்காக திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.
சத்யா அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலி மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. நகைக்காக கடைக்குள் புகுந்து அவரை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா? கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் நிகழ்ந்த விபரீதமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story