கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி, 1 டன் ரேஷன் அரிசி, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி, 1 டன் ரேஷன் அரிசி, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 10:19 PM GMT)

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போத்தனூர்,

கோவையில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க நேற்று மதியம் உணவு பாதுகாப்புத் துறை தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் கோவை வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது கேரளாவை நோக்கி சென்ற வாலிபர்கள் அதிகாரிகளை பார்த்த உடன் தாங்கள் வந்த மொபட்டை ரோட்டில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். உடனே பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த மொபட்டில் இருந்த மூட்டைகளை ஆய்வு செய்த போது அதில் ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்த நபர் ஒருவரும் அதிகாரிகளை பார்த்ததும், குறுக்கு சாலையில் புகுந்து தப்பி செல்ல முயன்றார். அதிகாரிகள் விரட்டி சென்றதால் அந்த நபர் மூட்டைகளை அங்கேயே போட்டு தப்பி சென்றுள்ளனர். அதை அதிகாரிகள் எடுத்து பார்த்த போது ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவத்திலும் மோட்டார் சைக்கிளுடன் ரேஷன் அரிசி பிடிபட்டது. நேற்று ஒரே நாளில் வாளையார் அருகே ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை உணவு பாதுகாப்பு துறை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவு பொருட்கள் பாதுகாப்பு துறையினர் குடோனில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப் பட்ட மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படு வதை தடுக்க கோவை-கேரள எல்லைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story