திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு மினிபஸ் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி
திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு மினிபஸ் மோதி தனியார் நிறுவன காவலாளி பலியானார்.
திருப்பூர்,
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைசாமி(வயது 50). இவர் திருப்பூரில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் இவர் ரெயில் நிலையம் முன்பு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழைய பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த வெள்ளைசாமி மீது மோதியது.
அப்போது பஸ்சின் ஓரத்தில் வெள்ளசாமியின் ஆடை சிக்கி கொண்டது. இதனால் பல மீட்டர் தூரம் வெள்ளைசாமி இழுத்து செல்லப்பட்டார். ஆனாலும் அதிக வேகத்துடன் பஸ்சை ஓட்டி வந்ததால், டிரைவரால் பஸ்சை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி அங்கும் இங்குமாக சிதறி ஓடினார்கள். இதையடுத்து ஒருவழியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இந்த விபத்தில் வெள்ளைசாமி கால்கள், இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி வெள்ளைசாமி ரோட்டில் கிடந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் மினிபஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதையடுத்து பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்சு அங்கு வரவில்லை. சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி, படுகாயங்களுடன் கிடந்த வெள்ளைசாமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story