பெண்ணாடம் அருகே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை - திருமணத்துக்கு மகள் சம்மதிக்காத விரக்தியில் விபரீத முடிவு


பெண்ணாடம் அருகே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை - திருமணத்துக்கு மகள் சம்மதிக்காத விரக்தியில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 10:45 PM GMT)

பெண்ணாடம் அருகே திருமணத்துக்கு மகள் சம்மதிக்காத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி கருப்பாயி (41). இவர் களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 2-வது மகள் மகாராணி அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

இந்த நிலையில் மகாராணிக்கு பழனிவேல், மாப்பிள்ளை பார்த்ததாக தெரிகிறது. ஆனால் மகாராணி, தனக்கு தற்போது திருமணம் வேண்டாம், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே போல் அவரது தாய் கருப்பாயியும் கூறியதாக தெரிகிறது.

திருமணத்துக்கு மகள் சம்மதிக்காத விரக்தியில் இருந்த பழனிவேல், அதே பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று விஷம் குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் விழுந்த அவர், உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கருப்பாயி பெண்ணாடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story