நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கொடைக்கானலில், அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். கொடைக்கானலுக்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கூறியதாவது:-
கொடைக்கானல்,
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பாரதீய ஜனதா மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு தடையாக இல்லை. ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான கட்சிகளை தமிழக மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மனம் கோணாத அளவில் மாற்று வழியில் சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படும். ஆனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கொடைக்கானலில் குறிஞ்சி கூட்டுறவு பண்டகசாலை நூற்றாண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பண்டகசாலையை சீரமைக்க சிறப்பான முடிவுகளை முதல்-அமைச்சர் அறிவிப்பார். மலைப்பகுதியில் விளையும் பயிர்களுக்கு சந்தைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படியான விலை கிடைத்தல் போன்றவற்றிற்கு கூட்டுறவுத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் மோடி அறிவித்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் அதிகம் பேர் பயன் அடைந்துள்ளனர். முதற்கட்டமாக சுமார் 20 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கொடைக்கானல் வந்த அமைச்சரை, அ.தி.மு.க. நகர செயலாளரும், நகரசபை முன்னாள் தலைவருமான ஸ்ரீதர், அவைத் தலைவர் ஜான்தாமஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
Related Tags :
Next Story