நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவர் நியமனம் கட்சி மேலிடம் முடிவு


நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவர் நியமனம் கட்சி மேலிடம் முடிவு
x
தினத்தந்தி 25 April 2019 10:54 PM GMT (Updated: 25 April 2019 10:54 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமனம் செய்ய அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.

முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்று பணியாற்றி வருகிறார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜனதா மாநில தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

அதிரடியான மாற்றங்கள்

பா.ஜனதா கட்சியை பொறுத்தவரையில் ஒருவருக்கு 2 பதவி வழங்கப்படமாட்டாது. ஆனால் எடியூரப்பா சக்தி வாய்ந்த தலைவராக இருப்பதால் அவருக்கு 2 பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு வயதாகிவிட்டது. 75 வயதை எடியூரப்பா கடந்துவிட்டார்.

பா.ஜனதாவில் 75 வயதை கடந்தவர்களை ஓரங்கட்டப்படுவது வழக்கம். அதன்படி எடியூரப்பாைவ ஓரங்கட்ட பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கர்நாடக பா.ஜனதாவில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

புதிய தலைவர் நியமனம்

கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமனம் செய்ய மேலிட தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர். பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை குறைத்து, அவரது மகன் பி.ஒய்.ராகவேந்திராவுக்கு மத்திய மந்திரி பதவி வழங்குவது குறித்தும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜனதா தலைவர் பதவியை பிடிக்க முன்னணி நிர்வாகிகள் ஆர்.அசோக், சி.டி.ரவி உள்பட பலரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

Next Story