வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிபென்னூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
ஹாவேரி,
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் டவுன் வாகிசா நகரில் வசித்து வந்தவர் நீலம்மா. இவருக்கு சொந்தமான இன்னொரு வீடு காலியாக இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று நீலம்மா வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்து கொண்டு, காலியாக உள்ள வீட்டை வாடகைக்கு கேட்பது போல் நடித்து மாகனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்த் பூஜாரி, ரமேஷ் ஹாவனூர், ஹாவேரியை சேர்ந்த நிங்கப்பா சிரகுப்பி, ஹரிஹராவை சேர்ந்த சேகப்பா ஆகியோர் அங்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து நீலம்மாவை படுகொலை செய்தனர். இதையடுத்து அவர்கள் நீலம்மா அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி நடந்தது.
4 பேருக்கும் ஆயுள் தண்டனை
இதுகுறித்து ராணிபென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் நீலம்மாவை கொலை செய்ததாக கோவிந்த் பூஜாரி, ரமேஷ் ஹாவனூர், நிங்கப்பா சிரகுப்பி, சேகப்பா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ராணிபென்னூரில் உள்ள 9-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அப்போது கோவிந்த் பூஜாரி, ரமேஷ் ஹாவனூர், நிங்கப்பா சிரகுப்பி, சேகப்பா ஆகியோர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story