திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல்


திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 11:18 PM GMT)

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம்,

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 29-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நேற்று முன்தினம் வரை 6 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார். முன்னதாக டாக்டர் சரவணன், திருநகர் 3-வது பஸ் நிறுத்தத்தில் இருந்து தனக்கன்குளம் பிரிவு வரை கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். பின்னர் அவர் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் மணிமாறன், காங்கிரஸ் பொறுப்பாளர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் இன்குலாப் ஆகியோருடன் வந்து திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணத்திடம் மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக டாக்டர் சரவணனின் மனைவி கனிமொழி மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறும்போது, “திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட டாக்டர் சரவணனுக்கு ஸ்டாலின் மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும். மக்களுக்கான ஆட்சியை தி.மு.க.வால் மட்டுமே கொண்டு வர முடியும். எனவே அடுத்த மாதம் 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பின்பு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உருவாகும்” என்றார்.

தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், தனக்கு ரூ.3 கோடியே 7 லட்சத்து 54 ஆயிரத்துக்கு அசையும் சொத்தும், ரூ.4 கோடியே 22 லட்சத்து 42 ஆயிரத்திற்கு அசையா சொத்தும் இருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அவரது மனைவி கனிமொழி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரமும், அசையா சொத்து ரூ.2 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story