வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொன்று நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது பெங்களூருவில் சிக்கினர்
வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொன்று நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.
மும்பை,
மும்பை போரிவிலியை சேர்ந்த முதியவர் வாமன் ஜோஷி(வயது70). இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மகன் கடைக்கு சென்றிருந்தார். வீட்டில் வாமன் ஜோஷி மட்டும் தனியாக இருந்தார். மதிய உணவிற்காக அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது வாமன் ஜோஷி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் தந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு நடத்திய பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் போரிவிலி போலீசில் புகார் அளித்தார்.
3 பேர் கைது
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவரது வீட்டிற்குள் 3 கொள்ளையர்கள் புகுந்து தனியாக இருந்த வாமன் ஜோஷியை கொலை செய்து, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதை வைத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில் கொலையாளிகள் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை மும்பை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story