மராட்டியத்தில் இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தல் 17 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது


மராட்டியத்தில் இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தல் 17 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது
x
தினத்தந்தி 25 April 2019 11:30 PM GMT (Updated: 25 April 2019 11:26 PM GMT)

மராட்டியத்தில் இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஷீரடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.

மும்பை,

மராட்டியத்தில் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல்

இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

4-வது மற்றும் இறுதிக்கட்டமாக வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளுக்கு வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

சூறாவளி பிரசாரம்

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 17 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) ஓய்கிறது.

மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

பிரதமர் மோடி

இவர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வருகிறார்.

மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பிரதமருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பங்கேற்கிறார்.

இதற்காக பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு பிரசார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ராகுல்காந்தி

இதேபோல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் செய்ய மராட்டியம் வருகிறார். ஷீரடி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சங்கம்நேர் பகுதியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.

மராட்டியத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நாளில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.

இதனால் மும்பை உள்ளிட்ட 17 தொகுதிகளில் தேர்தல்களம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

Next Story