திருவாடானைஅருகே, புதுக்காடு கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருவாடானை அருகே புதுக்காடு கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஓரியூரிலிருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் சாலையோரத்தில் உள்ள புதுக்காடு கிராமத்தில் சுமார் 40 கூலித்தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருகில் உள்ள அம்பேத்கர் நகர் வரை குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுக்காடு கிராமத்திற்கு இதுவரை குடிநீர் இணைப்பு ஏற்படுத்தவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் திருவாடானை யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் இன்னும் ஒரு வார காலத்தில் இப்பகுதி குடிநீர் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கிராம பெண்கள் கூறியதாவது:- கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் தினமும் குடிநீரை தேடி அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் கிடைக்காததால் ஒரு குடம் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் பிரச்சினையை எங்களால் சந்திக்க முடியவில்லை. கடந்த ஆண்டுகளில் எங்கள் கிராமத்தில் உள்ள ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து வந்தோம்.
ஆனால் ஆற்றில் மணல் அதிகஅளவில் அள்ளப்பட்டு விட்டதால் ஊற்று தோண்டினால் உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. இதனால் தினமும் சுமார் ரூ.200-க்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மேலும் எங்கள் கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரமாக உள்ளதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் மிகுந்த சிரமங்களுடன் நாட்களை நகர்த்தி வருகிறோம். இதனால் பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற பல கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story