பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக சேலத்தில் அரசு இ–சேவை மையங்களில் குவியும் பொதுமக்கள்


பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக சேலத்தில் அரசு இ–சேவை மையங்களில் குவியும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 26 April 2019 6:18 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக சேலத்தில் அரசு இ–சேவை மையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

சேலம், 

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அரசு பள்ளிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி. வகுப்பில் குழந்தைகளை சேர்க்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதன் முதலாக எல்.கே.ஜி. வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றால் குழந்தைக்கு ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ் தேவைப்படும். இதில், ஆதார் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவை தவிர மற்ற சான்றிதழ்கள் பெறுவதற்கு அரசு இ–சேவை மையங்களுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாநகரில் மணக்காடு பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம், மணியனூரில் தெற்கு தாலுகா அலுவலகம், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அரசு இ–சேவை மையங்களில் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இதனால் அங்கு காலை முதல் மாலை வரையிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இதுதவிர, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ–சேவை மையத்திலும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் சர்வர் அடிக்கடி பழுதாவதால் ஒருவர் விண்ணப்பம் செய்ய குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆவதாகவும், எனவே, கூடுதல் ஊழியர்களை நியமித்து விண்ணப்பதாரர்களின் சிரமங்களை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து டவுன் தாலுகா அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்ய வந்த சிலர் கூறுகையில், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. இதற்காக அரசு இ–சேவை மையங்களில் விண்ணப்பம் செய்துள்ளோம். மற்ற நாட்களை விட தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து 10 நாட்கள் கழித்தவுடன் அதை பெற்றுக்கொள்ள முடியும். சான்றிதழ்கள் அனைத்தும் கணினி மையம் என்று தெரிவித்துவிட்டு தாமதம் செய்வதால் பொதுமக்கள் அலைக்கழிப்பு செய்யப்படுகிறார்கள். எனவே, சான்றிதழ்களை விரைந்து வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story