25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் தனியார் பள்ளிகளில் 3,260 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை மே மாதம் 18–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 3,260 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி சேர்க்கை பெற மே மாதம் 18–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தர்மபுரி,
இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நுழைவுநிலை வகுப்புகளான எல்.கே.ஜி. அல்லது 1–ம் வகுப்பில் சேர்ந்து 8–ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவ–மாணவிகளுக்கு உரிய கல்வி கட்டணத்தை இந்த திட்டத்தின்படி அரசே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு செலுத்தும்.
இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சென்று மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மாணவ–மாணவிகளின் வசிப்பிடத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கலாம். சேர்க்கை பெற அதிகபட்சமாக 5 பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்களில் மாணவர் சேர்க்கை பெறும் குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் இருப்பிட சான்று, வருமான சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும் தனியார் பள்ளியில் சேர்க்கை இடங்களுக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 170 சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 3,260 இடங்கள் மாணவர் சேர்க்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அடுத்த மாதம் 18–ந்தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியுடைய பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.