32 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30½ லட்சம் திரும்ப ஒப்படைப்பு தாசில்தார் தகவல்


32 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30½ லட்சம் திரும்ப ஒப்படைப்பு தாசில்தார் தகவல்
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 26 April 2019 7:27 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 32 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30½ லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக தாசில்தார் ஜெயவேல் கூறினார்.

போளூர், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி போளூர் சட்டமன்ற தொகுதியில் 9 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3 பேரின் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் உரிய ஆவணங்களை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் போளூர் தாசில்தார் ஜெயவேல், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மஞ்சுளா ஆகியோர் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி ஒப்படைத்தனர்.

அதன்படி, சந்தவாசலை சேர்ந்த சங்கமலை மகன் சுபால் சந்திரபோசிடம் ரூ.60 ஆயிரம், நாமக்கல் மாவட்ட மதுதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் சிவக்குமாரிடம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய், சந்தவாசலை சேர்ந்த அமராராம் மகன் கோவிந்தராஜிடம் ரூ.70 ஆயிரம் நேற்று ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து போளூர் தாசில்தார் ஜெயவேல் கூறியதாவது:–

கடந்த மார்ச் மாதம் 22–ந் தேதி முதல் கடந்த 16–ந் தேதி வரை போளூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மூலம் 33 பேரிடம் இருந்து ரூ.31 லட்சத்து 23 ஆயிரத்து 735 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இந்த பணம் போளூர் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னர் 32 பேரின் பணத்தை திரும்ப வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, 32 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30 லட்சத்து 51 ஆயிரத்து 735 திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

இன்னும் ஒருவர் தான் பாக்கி உள்ளார். அவரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் அவரது பணமும் திரும்ப வழங்கப்படும். இது தவிர பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினரின் வாகனம் சோதனையில் 199 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து போளூர் கலால் போலீசிடம் ஒப்படைத்தனர். அதேபோல் 23 பெட்டியில் கடத்திய 575 கிலோ ஜெலட்டின் குச்சிகள் சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மஞ்சுளா, துணை தாசில்தார்கள் ஆனந்தகுமார், முனிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story