மனைவி பிரிந்து சென்ற வேதனையில் 2 முறை விஷம் குடித்த தொழிலாளி சாவு குளச்சல் அருகே பரிதாபம்
குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் 2 முறை விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குளச்சல்,
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குளச்சல் பெத்தேல்புரம் குழிவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 36), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விஜயன் மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதாவுக்கு ஊட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு வேலை கிடைத்தது. அதைத்தொடர்ந்து சுதா வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு சுதா கணவர் வீட்டுக்கு வரவில்லை. 3 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த வேதனையில் இருந்த விஜயன் கடந்த 15 நாட்களுக்கு முன் விஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அடுத்த சில நாட்களில் விஜயன் மீண்டும் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி விஜயன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story