லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து: பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி சிசுவுடன் சாவு வாணாபுரம் அருகே பரிதாபம்


லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து: பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி சிசுவுடன் சாவு வாணாபுரம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 27 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 9:23 PM IST)
t-max-icont-min-icon

போர்வெல் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி சிசுவுடன் பரிதாபமாக இறந்தார்.

வாணாபுரம், 

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், ஊர்க்காவல் படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது பிரியங்காவுடன் அவரது மாமனார் பாலகிருஷ்ணன் (50), மாமியார் அஞ்சலை (55) மற்றும் உறவினர் சேகர் என்பவரின் மனைவி செல்வி (35) ஆகியோர் சென்றனர்.

108 ஆம்புலன்சை சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (29) என்பவர் ஓட்டினார். சிட்டந்தாங்கலை சேர்ந்த இளங்கோ (27) என்பவர் ஆம்புலன்சில் உதவியாளராக இருந்தார்.

வாணாபுரம் அருகே உள்ள கீழ்கச்சராபட்டு அருகே ஆம்புலன்ஸ் செல்லும் போது எதிரே வந்த போர்வெல் லாரி மீது 108 ஆம்புலன்ஸ் மோதியது. இதில் பிரியங்கா உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பிரியங்கா சிகிச்சை பலனின்றி வயிற்றில் இருந்த சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story